'தனிமையில் உறவு'... 'கருத்தடை மாத்திரைக்கு பதிலா சைனைடு'... '20 பெண்களை சீரழித்த சீரியல் கில்லர் 'சைனைடு மோகன்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீரியல் கில்லர் சைனைடு மோகன், இந்த பெயர் நம்மில் பலருக்கு மறந்திருக்க வாய்ப்பில்லை. பல பெண்களுடன் நட்பாகப் பழகி, அவர்களுடன் பாலியல் வல்லுறவு மேற்கொண்ட பின்னர் சைனைடு வைத்துக் கொலை செய்வது தான் அவரின் வழக்கம். இந்நிலையில் அவர் மீது தொடரப்பட்ட கடைசி வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.
சைனைடு மோகன் கேரளாவின் காசர்கோடைச் சேர்ந்த 25 வயது பெண்ணைக் கடந்த 2009 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொள்வதாகப் பொய் சொல்லி பெங்களூரு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணுடன் லாட்ஜ் ஒன்றில் தங்கிய மோகன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் திருமணத்திற்கு முன்பு குழந்தை வேண்டாம் எனக் கருத்தடை மாத்திரைக்குப் பதிலாக சைனைடை கொடுத்துள்ளார். இதே வழக்கத்தைத் தான், மோகன் சீரழித்த அனைத்து பெண்களிடமும் பின்பற்றி உள்ளார்.
இதையடுத்து அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 5ல் அவருக்கு மரண தண்டனையும், மற்றவைகளில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. 5 மரண தண்டனைகளில் 2ல் அது, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்கானது, 20வது மற்றும் கடைசி வழக்கு ஆகும். இதனிடையே 20வது வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “ஐபிசி பிரிவு 302ன் படி, கொலை செய்த குற்றத்திற்காக 25,000 ரூபாய் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
பெண்ணைக் கடத்திய குற்றத்திற்காக 5,000 ரூபாய் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. விஷம் கொடுத்த காரணத்திற்காக 5,000 ரூபாய் அபராதமும் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. பெண்ணின் நகைகளைத் திருடிய காரணத்திற்காக 5,000 ரூபாய் அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் 46 சாட்சியங்கள், 89 ஆதாரங்களை நீதிமன்றம் விசாரணை செய்தது. இறுதியாக இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து திருடப்பட்ட நகையானது, அந்தப் பெண்ணின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.