'எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போய்ட்டாங்க...' மனிதம் எங்கே...? சாத்தான்குளம் சம்பவம் குறித்து...' கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வேதனை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாத்தான்குளம் விசாரணை வழக்கில் இறந்த தந்தை மகன் உயிருக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸை விட, சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, மர்மமான முறையில் தந்தை மகன் உயிரிழந்த செய்தி அனைவரையும் உலுக்கியுள்ளது. பலரின் கேள்வி எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாத இரு சாதாரண மனிதனுக்கு யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் அனைவரது மனதையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தந்தை மகனது இரட்டை மரணம் தமிழகம் மட்டுமல்லாமல் தற்போது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சினிமா நடிகர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் #JusticeForJeyarajAndFenix என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "அடிப்பவனுக்குத் தேவை ஆயுதம். வலிப்பவருக்குத் தேவை காரணம். இனத்துக்காக, மதத்துக்காக, நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நேற்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்னும் ட்வீட் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சினிமா துறையில் ஜெயம் ரவி, வரலக்ஷ்மி, ப்ரியங்கா சோப்ரா, யுவன் ஷங்கர் ராஜா, விஷால் என பலர் இந்த சம்பவம் குறித்து தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்