30 வருடத்துக்கும் மேல் சிறைவாசம்.. முதன்முறையாக பேரறிவாளனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
பேரறிவாளன்
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மே 28-ம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அப்போதில் இருந்து தொடர்ந்து அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
உச்ச நீதிமன்றம்
ஆனால், பரோலுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதால், சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை. அதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் இன்று (09.03.2022) விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு
அப்போது பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதில், ஏற்கனவே பேரறிவாளனுக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டுள்ளது. தற்போது மீண்டும் ஒரு சலுகை வழங்கி அவரை சிறையில் இருந்து விடுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திர அரசு வாதிட்டது. அப்போது, தண்டனை குறைப்பை உச்ச நீதிமன்றம் தான் வழங்கியது, மத்திய அரசு இல்லை என நீதிபதி கூறினார்.
ஜாமீன்
தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் மீது கவர்னர் முடிவெடுக்க முடியாது. குடியரசு தலைவர் மட்டும் தான் முடிவு எடுக்க முடியும் என கூறினார். அப்போது பேசிய நீதிபதி, ‛மத்திய அரசு இதில் மிகவும் தாமதம் செய்கிறது. பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். இன்னும் தாமதம் செய்வதை எப்படி ஏற்பது? அவரின் விடுதலைக்கு யாருக்கு அதிகாரம் என்பதை பின்னர் விசாரிக்கலாம். தற்போது ஜாமீன் தருவது பற்றியே விசாரணை நடக்கிறது. பரோலில் இருக்கும் பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை’ எனக் கூறி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 1991-ம் ஆண்டு பேரறிவாளன் கைது செய்யப்பட்ட பிறகு, 30 ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.