"சொந்தக்காரங்களை துன்புறுத்துறாங்க..." ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்டில் அவசரமாக புதிய மனு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்"நான் எங்கே? என்று என் உறவினர்களை காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர்" என உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள புதியமனுவில் தனது முன்ஜாமின் மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

கே.டி. ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
எப்போது மாயம்
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு எழுந்தது, அவர் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.17) அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். ஆனால் அதன்பின்னர் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் ராஜேந்திர பாலாஜியின் வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடுகளில் தேடினார்கள்.
600 பேர் எண்கள்
ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசிய 600 பேரின் எண்களை வைத்து போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் கேரளா, கொடைக்கானல், கோவைக்கு விரைந்துள்ளனர். ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் இருக்கலாம் என்ற தகவலின் பெயரில் ஒரு தனிப்படை அங்கும் முகாமிட்டுள்ளது.
முன்ஜாமின் மனு
ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனிடையே அவரது இருப்பிடம் குறித்து அவரது உறவினர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் புதியதொரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ராஜேந்திர பாலாஜி புதிய மனு
அதில் "நான் எங்கே என கேட்டு எனது உறவினர்களை இரவு நேரங்களில் கூட போலீசார் தொந்தரவு செய்து துன்புறுத்துகிறார்கள். எனவே தனது முன்ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்" என்று புதிய மனுவில் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இந்த மனு மீது எப்போது விசாரணை நடத்தப்படும் என்று தெரியவில்லை. ஒருவேளை முன்ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தால் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவது உறுதியாகிவிடும்.

மற்ற செய்திகள்
