'மகாத்மா காந்தியை சிறையில் அடைத்த... 'இந்த' சட்டம் இன்னும் வேணுமா'?.. மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் அமலில் உள்ள மிகப்பெரும் சர்ச்சைக்குள்ளாகும் சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓய்வு பற்ற மேஜர் எஸ்.ஜி.ஓம்பட்கேர் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வழிவகுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ-வை ரத்து செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியது தான் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசதுரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோக சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன்? மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேச துரோக சட்டம், விடுதலை பெற்ற பின்னரும் தேவைப்படுகிறதா?
தேச துரோக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் மரத்தை வெட்ட கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது. அந்த ரம்பத்தை கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் தற்போது அழிப்பது போன்று அமைந்துள்ளது. புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளால் தேச துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அது வேதனை அளிக்கிறது.
இந்த சட்டம் மத்திய அரசுக்கு குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் மீதும், அப்பாவி மக்கள் மீதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு போலீஸ் அதிகாரிகள் பொறுப்பேற்பதில்லை.
தேச துரோக வழக்கில் தண்டனை பெறுபவர்களை பார்த்தால் அதன் எண்ணிக்கை மிக மிக குறைவு. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடுகிறோம்' என்று தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
