'வேணும்னே அப்படி சொல்லல...' 'ஆக்சுவலா நான் என்ன சொல்ல வந்தேன்னா...' - முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த மன்சூர் அலிகான்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கமிஷனர் அளித்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து அவதூறு தகவலை பரப்பியுள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது, இதன்காரணமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
சின்ன கலைவாணர் என்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் எவ்வித பலனின்றி மறைந்தார்.
அதற்கு முந்தைய நாள், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் பரபரப்பு கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவியது. அந்த கருத்து மிகவும் தவறானது என மருத்துவ ஆய்வாளர்கள் கண்டித்தனர். இதனை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நான் அளித்த பெட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டுள்ளார், உள்நோக்கத்தோடு வேண்டும் என்றே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை எனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
