'திடீர்னு எழுப்பப்பட்ட தேவாலய மணி சத்தம்...' 'குவிந்த பொதுமக்கள்...' - எல்லாத்துக்கும் காரணம் ஒரு போர்டு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் அருகே இருக்கும் இரு கிராம கிருத்துவமக்கள் தங்கள் கிராம பெயர்களையே பேருந்து நிறுத்தத்திற்கு வைக்கவேண்டும் என தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கீழ்புறத்தில் கொழுந்தட்டு கிராமமும், கொழுந்தட்டு-தட்டார்மடம் சாலை மேல்புறத்தில் போலையார்புரம் அமைந்துள்ளது. இரு கிராமங்களிலும் சிஎஸ்.ஐ. மற்றும் ஆர்சி கிறிஸ்தவ மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுக்குமுன் போலையார்புரத்தில் பாழடைந்த இடத்தை சீரமைத்து பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டது. மேலும், புதிதாக கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்திற்கு தங்கள் ஊர் பெயர் வைக்குமாறு இரு கிராம மக்களும் கூறியதால் அப்போதைய கலெக்டர், பஸ் நிறுத்தத்திற்கு ஊர் பெயர் வைக்க தடை விதித்தார்.
தற்போது தீடீரென போலையர்புரம் கிராம மக்கள், காமராஜர் பஸ் நிறுத்தம் என தற்போது போர்டு வைத்துள்ளனர். இதன்காரணமாக நேற்றிரவு 7 மணி அளவில் அங்குள்ள சவேரியார்புரம் தேவாலயத்தில் ஆலயமணி ஒலித்து கிராம மக்கள், தேவாலயம் முன் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெபதாஸ், தாசில்தார் லட்சுமி கணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தூர்ராஜன், விஏஓ சத்தியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதான பேச்சை ஏற்க மறுத்ததுடன் பஸ் நிறுத்தத்திற்கு எதிர்புறம் கொழுந்தட்டு கிராமம் என டிஜிட்டல் போர்டு வைத்தனர்.
பஸ் நிறுத்தத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.