பரிசுப் பெட்டியா? குக்கரா?.. ஒரே குழப்பமா இருக்கு.. பேரும் ஒரே மாதிரியா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 04, 2019 11:14 AM
அ.ம.மு.க வேட்பாளர்களின் பெயரையொத்த சுயேட்சை வேட்பாளர்களுக்கு 4 தொகுதிகளில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது டி.டி.வி. தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவையின் 18 தொகுதி இடைத்தேர்தலிலும், குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு வழங்கவேண்டும் என டி.டி.வி. தினகரன் கோரிக்கை வைத்தார்.
ஆனால், இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதன்பின்னர் உச்சநீதிமன்றம் வரை டி.டி.வி. தினகரன் சென்ற நிலையில், அங்கேயும் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் அ.ம.மு.க.விற்கு பொதுச் சின்னம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்கள் பொதுச் சின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர், பாப்பிரெட்டிபட்டி, கரூர், சாத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்களின் பெயரையொத்த, சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் கேட்டபோது, தேர்தல் ஆணையம் அதனை ஒதுக்கவில்லை. ஆனால் தற்போது அ.ம.மு.க. வேட்பாளர்களின் பெயரையோத்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதனால் தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
