கருவில் இருப்பது ஆணா? பெண்ணா?.. வீட்டுக்கே வந்து ஸ்கேன் செய்யும் கும்பல்!.. கர்ப்பிணியின் தாய் உட்பட 4 பேர் கைது!.. பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கருவில் இருப்பது ஆணா பெண்ணா எனத் தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றம் என்ற நிலையில், வீடு தேடி வந்து ஸ்கேன் செய்த கும்பலால் கர்ப்பிணி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மல்லியக்கரையை அடுத்துள்ள கோபாலபுரம் கிராமம் குட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் சரவணன், விவசாயி. இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுடைய மகள் சரண்யா (வயது 28). இவருடைய கணவர் அருள், அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
சரண்யாவுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சரண்யா மீண்டும் கர்ப்பமானார். ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் சரண்யாவின் தாயார் பூங்கொடி, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிய திட்டமிட்டார்.
இதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வேப்பிலை குட்டை பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவரை பூங்கொடி அணுகினார். இதைத்தொடர்ந்து ஆத்தூரில் இருந்து ஸ்கேனர் கருவியுடன், அதை பயன்படுத்தும் தொழில்நுட்ப உதவியாளர் ஒருவரை அழைத்துக்கொண்டு சின்னராசு, சரண்யாவின் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர்கள் சரண்யாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அப்போது கருவில் இருக்கும் குழந்தை, 4 மாத பெண் சிசு எனக் கூறி விட்டு அவர்கள் இருவரும் சென்று விட்டனர். இதையடுத்து சரண்யாவின் கருவை கலைக்க பூங்கொடி திட்டமிட்டார். அதன்படி சேலம் சீலநாயக்கன்பட்டி வீராசாமி புதூர் பகுதியை சேர்ந்த சத்தியராஜின் மனைவி சிவ பிருந்தாதேவி (32) மற்றும் ஆத்தூரை சேர்ந்த ஒரு போலி டாக்டர் ஆகியோர் உதவியுடன் சரண்யாவுக்கு கருவை கலைக்க சிகிச்சை அளித்தனர். இதில் சரண்யா உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் சரண்யா, வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சம்பத்குமார், மல்லியக்கரை போலீசில் புகார் செய்தார்.
அதில், சரண்யாவுக்கு தவறான சிகிச்சை அளித்தல், கருக்கலைப்பு செய்தல், அனுமதியின்றி ஸ்கேன் செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் அவரது தாயார் உள்பட 6 பேர் மீது புகார் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக, சரண்யாவின் தாயார் பூங்கொடி (48), அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் அலமேலு (50), கருக்கலைப்புக்கு உதவியாக இருந்ததாக சிவபிருந்தாதேவி (32), ராசிபுரம் அருகே உள்ள வேப்பிலை குட்டை பகுதியை சேர்ந்த சின்னராசு (33) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் மற்றும் ஸ்கேன் எடுத்த நபர் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் மல்லியக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.