இனி தப்பு பண்ணா தப்ப முடியாது.. இவங்கதான்யா உண்மையான 'சிங்கப்பெண்ணே'.. பிரத்யேக பேட்டி .. வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jul 26, 2019 04:38 PM
திரைப்படத்தில் வருவது போல, சவுதி அரேபியா வரை சென்று, பாலியல் குற்றவாளி ஒருவரை பிடித்து கேரளாவின் சட்டக்கூண்டில் கொண்டுவந்து நிறுத்தியுள்ள துணிச்சல் மிக்க ஐபிஎஸ் மங்கையான மெரின் ஜோசப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக விளங்கி வருகிறார். நிஜவாழ்க்கை 'சிங்கப் பெண்ணே' என்று சொல்லும் அளவுக்கு தென்னிந்தியாவின் தலைப்பு செய்திகளுக்குள் அங்கம் வகிக்கிறார்.

இவர் சமீபத்தில் BEHINDWOODS ICE YouTube சேனலுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், 2017-ஆம் ஆண்டு தொடங்கிய இவ்வழக்கை பற்றி விவரிக்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு, தனது 13 வயதேயான உறவுக்கார சிறுமியை தொடர்ந்து 3 மாதங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சுனில் குமார் பத்ரன் 38 வயதானவர். அதன் பின்னர் சவுதி அரேபியாவின் ரியாத் எனும் பகுதிக்கு டைல்ஸ் வேலை செய்ய சுனில் குமார் பத்ரன் சென்றுவிட்டதையடுத்து, இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியோ, கொல்லம் மாவட்டத்தின் மகிளா மீட்பகத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு, 2 வருடங்கள் கழித்து, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக சார்ஜ் எடுத்த மெரின் ஜோசப், கிடப்பில் இருந்த இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ளார்.
எதற்கும் அஞ்சாமல், எல்லா வகையான விசாரணைகளையும் செய்து, நேரடியாக சவுதி அரேபியா வரை சென்று, ரியாத் பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த சுனில் குமார் பத்ரனை கைது செய்து கேரளாவிற்கு இழுத்துவந்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என யாவரையும் விட ஒரு ஐபிஎஸ் அதிகாரி நேரடியாக இந்த வழக்கில் இறங்கி நடவடிக்கை எடுக்கும்போது அது இளைய தலைமுறை காவல்துறையினருக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்றும், பொதுமக்களின் கவனத்துக்கு, காவல்துறையை பற்றிய விழிப்பும் புரிதலும் வர வாய்ப்பிருக்கும் என கருதியும், தான் இதைச் செய்ததாக மெரின் ஜோசப் பேட்டியில் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தனது பெரிய இன்ஸ்பிரேஷனாக டாக்டர் கிரண்பேடியின் பெயரைச் சொல்லும், மெரின் ஜோசப் ஐபிஎஸ், கேரளாவில் ஸ்ரீலேகா ஐபிஎஸ் மற்றும் சந்தியா ஐபிஎஸ் ஆகியோருக்கு அடுத்தபடியான 3வது ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த வழக்கை 2 வருடங்கள் கழித்து கையில் எடுத்ததாகக் கூறும் மெரின் ஜோசப்பின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, இந்தியத் தூதரகமும், சர்வதேச காவல்துறைகளும் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
