23 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மீனவர்.. இலங்கையில் மனநல பாதிப்புடன் திரியும் பரிதாபம்.. உதவிய சமூக வலைதள சேனல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 06, 2019 01:00 PM
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மீனவர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்டு தற்போது இலங்கையில் சுற்றித் திரிவது தெரியவந்துள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு மே மாதம், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த பரதன் உள்ளிட்ட 3 பேர் கரை திரும்பவில்லை. பல நாட்களாக தேடியும் அவர்கள் கிடைக்காததால், மாயமானவர்கள் பட்டியலில் சேர்த்தது மீன்வளத்துறை. பரதன் காணாமல் போன அந்த நாளை, அவரது இறந்தநாளாக உறவினர்கள் அனுசரித்து வந்தனர்.
இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரக்கூடிய சமூக வலைதள சேனல் ஒன்றில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிச்சை எடுத்து வருபவர்களின் புகைப்படங்களும் காண்பிக்கப்பட்டது. அந்தச் செய்தியை செல்போனில் பார்த்துக்கொண்டு இருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், அந்த செய்தியில் காண்பிக்கப்பட்டவர்களில் ஒருவர், மாயமானதாக அறிவிக்கப்பட்ட மீனவர் பரதன் இருந்ததை பார்த்துள்ளார்.
பின்னர் அதனை பரதனின் உறவினர்களுக்கு காண்பிக்க அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காணாமல் போன பரதன் தான் என்பதை உறுதி செய்த உறவினர்கள், உயிருடன் மனநிலை பாதிக்கப்பட்டு கொழும்பு பகுதியில் சுற்றித் திரியும் பரதனை மீட்டுத் தரக்கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் பரதனின் மகள் வீட்டுக்கு சென்று அவர் குறித்து தகவல்களை சேகரித்ததுடன், அவர்கள் கொடுத்த கோரிக்கை கடிதத்தையும் பெற்றுக் கொண்டனர். 23 ஆண்டுகளாக காணாமல் போனதாக நினைத்த ஒருவர் உயிருடன் இருப்பது அப்பகுதியில் உள்ள மீனவ மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.