“சாவோடு சடுகுடு ஆடுவோர்.. மரணத்தோடு மங்காத்தா ஆடுவார்.. எமனை லெமன் மாதிரி புழிஞ்சு வீசுவார்!” - ரஜினியைப் புகழ்ந்த ‘பிரபல திரைப்பட’ இயக்குநர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி அவருடைய ரசிகர்கள் சென்னையில் தொடர்ச்சியாக சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் இருந்தபோது படப்பிடிப்பில் யாரோ 4 பேருக்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ரஜினி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா இல்லை, அதாவது கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதனையடுத்து அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த நாள் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ரஜினியின் உடல்நிலை மற்றும் சமூகத்தில் தொடர்ச்சியாக நீடித்து வரும் கொரோனா சூழ்நிலை உள்ளிட்டவற்றின் காரணமாக கட்சிப் பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தன்னால் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்றும் இந்த முடிவு ஏமாற்றம் அளித்தால் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ரஜினி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே வரும் ஜனவரியில் கட்சி தொடங்கி எல்லா முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்த ரஜினி திடீரென்று இப்படி ஒரு முடிவெடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.
சுமார் 20 வருடங்களாக ரஜினியை அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் ரஜினியே எதிர்பாராதவிதமாக இப்படி ஒரு முடிவு வெளியானது பலருக்கும் ஏமாற்றம் அளித்தாலும் ரஜினியின் நண்பர்கள், அபிமானிகள், சில ரசிகர்கள் என பலரும், “உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் தலைவா!” என்று இந்த விஷயத்தை முடித்துவிட்டனர்.
இருந்தும் ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் சேர்ந்து சென்னையில் ரஜினியின் அரசியல் தொடர்பான முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் தற்போது ரஜினி மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலரும் சேர்ந்து இப்படி ஒரு நிகழ்வை, தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிப்பதாகவும் அரசியலுக்கு வரவில்லை என்பதற்கான காரணங்களை விரிவாக விளக்கிய பிறகும், தன் முடிவை தெளிவாக கூறிய பிறகும், தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பிரபல ஜோடி, ரட்சகன் திரைப்படங்களின் இயக்குநரும், ரஜினியின் தீவிர ரசிகருமான பிரவீன் காந்தி, “ரஜினி மரணத்தோடு மங்காத்தா ஆடுவார், சாவோடு சடுகுடு ஆடுவார், எமனை லெமன் மாதிரி புழிந்து வீசுவார்” என்று ‘பாசிடிவாக’ பேசியுள்ளது தீயாக பரவி வருகிறது.
முன்னதாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் செய்தியாளர்களிடையே ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து உலகத்தை அச்சுறுத்துவார், அது அவர் ஒருவரால் தான் முடியும் என்று பேசிய பேச்சு பரவலானது.