அப்பாடா நவம்பர் முடிஞ்சிருச்சின்னு நெனக்காதீங்க.. டிசம்பர்னு ஒரு மாசம் இருக்கு.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 11 அதிதீவிர கனமழையும், 168 மிக கனமழையும், 645 கனமழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக 11 மிக அதி கனமழை பெய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக தென்னிந்தியாதான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்னிந்தியாவில் நவம்பர் மாதம் 160 சதவிகிதம் கூடுதலாக கனமழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 2.4 என்ற சராசரி என்ற அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகும். ஆனால் இந்த ஆண்டு 5 குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக நவம்பரில் சராசரியாக 8.95 சென்டிமீட்டர் மழை பதிவாகும். ஆனால் இந்த முறை 160 சதவீதம் அதிகமாக 23.27 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 1901-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் நவம்பரில் அதிகளவு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தென்னிந்தியாவில் இயல்பை விட டிசம்பரில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயல்பை விட 132 சதவீதம் மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.