"புயல் 'வந்தது'ல வீடு எல்லாம் சேதமாகி போச்சு..." உடைந்து போய் நின்ற நண்பருக்கு,,.. 'உதவி' செய்து 'நெகிழ' வைத்த பள்ளி 'நண்பர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் (வயது 44). கடந்த கஜா புயலின் போது புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதில் முத்துக்குமாரின் வீடும் அதிகமாக சேதமடைந்தது. அந்த வீட்டின் மேற்கூரைகளில் விளம்பர பதாகைகள் பயன்படுத்தி அவரும், அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கொரோனாவுக்கு முன்பு ஆட்டோ ஓட்டி, முத்துக்குமார் தனது குடும்பத்தை பார்த்து வந்த நிலையில், கொரோனாவால் அவரது வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் ஆட்டோவை விற்ற நிலையில், தற்போது டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கொரோனாவின் காரணமாக வெளியூரில் இருந்த முத்துக்குமாரின் பள்ளி நண்பர்கள் சொந்த ஊர் வந்தனர். முத்துக்குமாரின் நண்பரில் ஒருவர் முத்துக்குமாரின் வீட்டை பார்த்த நிலையில், அவர் மிகவும் வருத்தமடைந்துள்ளார்.
இதனால், 30 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக பள்ளியில் படித்த நண்பர்களை வாட்ஸ் அப் குழு மூலம் ஒன்றிணைத்து அதில் முத்துக்குமாரின் சேதமடைந்த வீடு தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். ஏழ்மை நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு போயிருக்கும் நண்பர் முத்துக்குமாருக்கு புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுக்க நண்பர்கள் முடிவு செய்துள்ளனர்.
நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதே இடத்தில் புதிய வீடு ஒன்றை முத்துகுமாருக்காக கட்டிக் கொடுத்தனர். அதனை தீபாவளி பரிசாக முத்துக்குமாருக்கு நண்பர்கள் அளித்தனர். முப்பது வருடங்களுக்கு மேலாகியும் நண்பரின் நிலையைக் கண்டு உடனடியாக அனைவரும் சேர்ந்து வீடு கட்டிக் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.