அர்ஜுனா விருதுடன் அமைச்சர் உதயநிதியை சந்தித்த பிரக்யானந்தா.. அமைச்சரின் உருக்கமான ட்வீட்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான பிரக்யானந்தா அர்ஜுனா விருதுபெற்ற நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.

பிரக்ஞானந்தா 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ல் பிறந்தார். இவர் சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர். தற்போது அவர், தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு கணினி அறிவியல் பயின்று வருகிறார். பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தாய் நாகலெட்சுமி. பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி. இருவருமே செஸ் போட்டியில் விளையாடி வருகின்றனர்.
சிறுவயதில் அக்காவை செஸ் போட்டியில் வீழ்த்த வேண்டும் என பயிற்சி பெற்றுவந்த பிரக்யானந்தா அதன்பிறகு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற துவங்கினார். தனது 5 வயதில் செஸ் விளையாடத் தொடங்கி 7 வயதில் ஃபிடே மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார் பிரக்ஞானந்தா. தொடர்ந்து 2013-ம் ஆண்டு 8 வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பையும், 2015-ம் ஆண்டு 10 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று அனைவரையும் திகைப்படைய செய்தவர் பிரக்யானந்தா. 2016-ல் உலகின் இளம் இன்டெர்நேஷ்னல் மாஸ்டர் என்ற பட்டத்தையும் இவர் வென்றிருந்தார்.
அதுமட்டும் அல்லாமல், 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்யானந்தா இந்த ஆண்டு நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியின் 8-வது சுற்றில் உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரக்யானந்தாவின் சாதனைகளை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு அர்ஜுனா விருது அளித்தது.
இந்நிலையில், அர்ஜுனா விருதுடன் பிரக்யானந்தா, சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி சட்ட மன்ற உறுப்பினரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். இளம் வயதில் அர்ஜுனா விருது பெற்ற பிரக்யானந்தாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்,"சதுரங்க உலகை தன் இளம் கரங்களால் வியக்கவைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துவரும் சகோதரர் பிரக்யானந்தா அவர்கள், சமீபத்தில் தான் பெற்ற அர்ஜுனா விருதை இன்று என்னிடம் நேரில் காண்பித்து வாழ்த்துபெற்றார். உலக அரங்கில் அவரின் திறமை மேலும் உயர தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சதுரங்க உலகை தன் இளம் கரங்களால் வியக்கவைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துவரும் சகோதரர் @rpragchess அவர்கள், சமீபத்தில் தான் பெற்ற #ArjunaAwards-யை இன்று என்னிடம் நேரில் காண்பித்து வாழ்த்துபெற்றார். உலக அரங்கில் அவரின் திறமை மேலும் உயர தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும். pic.twitter.com/YWEhHHqMDy
— Udhay (@Udhaystalin) December 30, 2022

மற்ற செய்திகள்
