“உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்..” — அமைச்சர் உதயநிதிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து..! UDHAYANIDHI STALIN
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இதனையடுத்து அவருக்காக தமிழக தலைமை செயலகத்தில் புதிய அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு சில தினங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிட முதல்வர் முக.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்ததாகவும் இதுகுறித்து ஆளுநருர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. பின்னர் தமிழக அரசு அதனை உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில், உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சரான உதயநிதிக்கு பல பிரபலங்களும் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், “வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தமது வாழ்த்துக் குறிப்பில் “தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, தமது ட்விட்டர் பக்கத்தில், “உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான், இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது. உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள். தளபதி மகனே வருக. தமிழர்க்கு மேன்மை தருக. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்!” என அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.