"ஸ்போர்ட்ஸ்ல சீனா மாதிரி".. பத்திரிகையாளரின் கேள்வி.. கலகலக்க வச்ச அமைச்சர் உதயநிதியின் பதில்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசினார்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அண்மையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அவர் தேர்வு மீண்டும் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்திருந்தார். இதனிடையே, அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிட முதல்வர் முக.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்ததாகவும் இதுகுறித்து ஆளுநருர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. பின்னர் தமிழக அரசு அதனை உறுதிப்படுத்தியது. இந்நிலையில், ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சி தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.
பதவியேற்பு விழா முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,"விமர்சனங்கள், வரும், வாரிசு அரசியல் என்று சொல்வார்கள். அது எனக்கு புதுசு இல்லை. அதை தடுக்கவும் முடியாது. அவற்றை என் செயல்கள் மூலம் மாற்றுவேன். விமர்சனங்கள் இருந்தால் தாராளமாக சொல்லுங்கள். முன்வையுங்கள். மாற்றிக்கொள்ள பார்க்கிறோம்" எனக் கூறினார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் "சீனா விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குகிறது, அதுபோல தமிழகத்தை மாற்ற என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறீர்கள்?" எனக் கேட்டார். இதற்கு புன்னகையுடன் பதில் அளித்த உதயநிதி,"இப்போதுதான் பதவியேற்று அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறேன். அதன்பிறகு தான் முதல் கோப்பில் கையெழுத்து போட முடியும்" என்றார்.
தொடர்ந்து அந்த பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்,"நிச்சயம் தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஸ்டேடியம் அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்தோம். நிச்சயம் அதனை நிறைவேற்றுவோம்" என்றார்.
இதனையடுத்து அலுவலகத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் முதல்வர் கோப்பைக்கு 47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல் கையெழுத்திட்டார். பின்னர், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தலா 6000 ரூபாய் வழங்கும் திட்டத்திலும் கையெழுத்திட்டார்.