"பேசுறதுக்கு PREPARE பண்ணது எல்லாம் வேஸ்ட்டா போச்சே.." பட்டமளிப்பு விழாவில் கலகலப்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஜாலியாக சில விஷயங்களை மாணவ மாணவிகள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.
மாநிலக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உயதநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் என்னும் வகையில் தான் பெருமை கொள்வதாக கூறி, தனது கல்லூரி நாட்களையும் அவர் மேடையில் நினைவு கூர்ந்து பேசினார்.
இனிமே ஒண்ணும் பேசுறதுக்கு இல்ல..
தொடர்ந்து, இந்த நிகழ்வில் பேசிய சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், "நேற்று இரவு முழுவதும் இந்த கல்லூரி குறித்த வரலாற்றை பற்றி நிறைய தெரிந்து கொண்டு, இன்று பேசுவதற்கு குறிப்புகளை எல்லாம் நான் எடுத்து வைத்திருந்தேன். ஆனால், அது அத்தனையும் கல்லூரி முதல்வர் ராமன் பேசி விட்டார். எனவே, நான் பேசுவதற்கு இப்பொழுது எதுவுமே இல்லை" என உதயநிதி ஸ்டாலின் சிரித்துக் கொண்டே கூறியதும், அங்கிருந்த மாணவ - மாணவிகளும் சிரிக்கத் தொடங்கினர்.
மாணவர்கள் வைத்த கோரிக்கை..
தொடர்ந்து பேசிய உதயநிதி, "இது போன்ற அங்கியை அணிந்திருப்பதும் இது தான் முதல் முறை. என்னுடைய பட்டமளிப்பு விழாவிற்கு கூட நான் அங்கி எல்லாம் போட்டு கொண்டு போகவில்லை. எனவே, இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கும், கல்லூரி முதல்வருக்கும், அமைச்சர் பொன்முடிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டம் வாங்க வந்திருக்கும் மாணவ மாணவிகள், அவரது பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இங்கே வரும் பொழுது, மாணவர்கள் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். இங்கே இருக்கும் கேண்டீன் வசதி சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதை சரி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்தார்கள். முதல் வேலையாக, நானும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் இணைந்து வெகு விரைவில் சரி செய்து தருவோம்" என உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார்.