கூலி தொழிலாளிக்கு லாட்டரியில் அடிச்ச ஜாக்பாட்...பரிசு தொகையை கேட்டதும்..பாதுகாப்பு கொடுங்கன்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கூலி தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் 80 லட்ச ருபாய் பரிசு கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், என்ன செய்வதென்று தெரியாமல் காவல்துறையிடம் தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அரசின் அனுமதியுடன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதித்து பார்க்க விரும்பும் மக்கள் லாட்டரி டிக்கெட் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு 80 லட்ச ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது.
வறுமை
அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்தவர் அலாவுதீன். 40 வயதான இவர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்ப வறுமை காரணமாக கேரளாவிற்கு வந்திருக்கிறார். இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அஸ்ஸாமில் வசித்துவருகின்றனர். இவர் மூவாட்டுப்புழா அருகே உள்ள பெழக்கப்பள்ளியில் தங்கி மரவேலை பார்த்து வருகிறார். அலாவுதீனுக்கு லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் இருந்திருக்கிறது. வழக்கம்போல சமீபத்தில் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார் இவர்.
இந்நிலையில், லாட்டரி முடிவுகளை அலாவுதீன் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியில் திளைத்திருக்கிறார். காரணம் அவர் வாங்கிய லாட்டரி மூலமாக அவருக்கு 80 லட்ச ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது.
போலீசில் உதவி
இதனையடுத்து, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அலாவுதீன் மூவாட்டுப்புழா காவல்நிலையத்திற்கு சென்று தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டிருக்கிறார். அவரிடம் இருந்து விஷயத்தை அறிந்த காவல்துறை அதிகாரிகள், லாட்டரி நிறுவன அதிகாரிகளிடம் இருந்து ரசீதை பெற்று அலாவுதீனிடம் வழங்கியிருக்கிறார்கள். அதன் பிறகு, அதே பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றிற்கு அலாவுதீனை அழைத்துச் சென்று அவருக்குரிய பணத்தையும் வாங்கி கொடுத்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
வறுமை காரணமாக கேரளாவில் 15 ஆண்டுகளாக கூலி வேலை செய்துவந்த அலாவுதீனுக்கு லாட்டரியில் 80 லட்ச ரூபாய் பணம் கிடைத்திருப்பது கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
