"இதோ இந்த பாம்புதான் என் பொண்டாட்டிய கடிச்சிடுச்சு".. பாம்புடன் ஹாஸ்பிடலுக்கு வந்த கணவர்.. அதிர்ந்த டாக்டர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் தனது மனைவியை பாம்பு கடித்துவிட்டதாக மருத்துவனைக்கு அழைத்துச் சென்ற கணவர், கடித்த பாம்பையும் தூக்கிச் சென்றுள்ளார். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சத்தம்
உத்திர பிரதேச மாநிலத்தின் அப்சல் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமேந்திரா யாதவ். இவர் தனது மனைவியுடன் இதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காலை வழக்கம்போல வீட்டு வேலைகளை பார்க்க துவங்கியுள்ளார் ராமேந்திரா யாதவின் மனைவி. அப்போது வீட்டிற்குள் வித்தியாசமாக சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் குழப்பமடைந்த அவர், தொடர்ந்து வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில், வீட்டின் மூலையில் இருந்த பாம்பு ஒன்று அந்த பெண்மணியை கடித்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டிருக்கிறார்.
இதனிடையே வீட்டுக்கு விரைந்து வந்த ராமேந்திரா யாதவ் உடனடியாக தனது மனைவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மனைவியை மருத்துவனையில் அனுமதித்துவிட்டு, தான் கொண்டுவந்திருந்த பையில் இருந்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை வெளியே எடுத்திருக்கிறார் ராமேந்திரா யாதவ். அதற்குள் பாம்பு இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
பாம்பு
"எதற்காக பாம்பை மருத்துவமனைக்கு கொண்டுவந்தீர்கள்?" என மருத்துவர்கள் கேட்க, அதற்கு பதிலளித்த ராமேந்திரா," ஒருவேளை நீங்கள் என்ன பாம்பு கடித்தது என கேட்பீர்கள் என நினைத்தேன். அதனால் பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு எடுத்து வந்தேன்" எனச் சொல்லியிருக்கிறார்.
இதனிடையே, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட ராமேந்திராவின் மனைவிக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்கள், அவர் நலம்பெற்று வருவதாக கூறியதால் அவர் நிம்மதியடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அந்த பெண்மணி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிந்த பத்திரிக்கையாளர்கள் ராமேந்திராவை சந்தித்து பாம்பு குறித்து கேட்டிருக்கின்றனர். அப்போது,"எனது மனைவி நலம் பெற்றுவிட்டதாகவும் அவரை வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம் எனவும் மருத்துவர்கள் கூறியதால், அந்த பாம்பை வனப் பகுதிக்குள் விட்டுவிட்டேன்" எனச் சொல்லியிருக்கிறார் அவர்.
உத்திர பிரதேசத்தில் தனது மனைவியை பாம்பு கடித்து விட்டதாக மருத்துவனைக்கு அழைத்துச் சென்ற கணவர், கடித்த பாம்பையும் கொண்டுசென்ற நிகழ்வு அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.