'மக்களாகிய நீங்க செஞ்ச பெரிய தப்பு இதுதான்'... 'இனிமேல் தான் விஜய பிரபாகரனைப் பாப்பீங்க'... கொந்தளித்த விஜய பிரபாகரன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியுள்ள நிலையில், அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கேட்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு கொண்டார். அப்போது அவர் அதிமுக மற்றும் திமுகவைக் கடுமையான விமர்சித்துப் பேசினார்.
அதில், ''தேமுதிகவைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? இதுவரை விஜயகாந்த்தைப் பார்த்திருப்பீர்கள், பிரேமலதாவைப் பார்த்திருப்பீர்கள். இனி இரண்டு பேரையும் கலந்து விஜய பிரபாகரனைப் பார்ப்பீர்கள். 'சின்ன பையன்' என்கிறீர்களே. ஆமாம், 'சின்ன பையன்'தான். ஆனால், நல்ல பையன், ஒழுக்கமான பையன். உங்களைப் போன்று காசுக்குப் பின்னல் போகும் கூட்டமல்ல. எங்கள் அப்பா அப்படி எங்களை வளர்க்கவில்லை.
ஒருவர் ஆயிரம் ரூபாய் என்கிறார், இன்னொருவர் 1,500 ரூபாய் என்கிறார். 1,000 ரூபாய் சம்பாதிக்கக்கூட வக்கற்றுக் கிடக்கிறதா தமிழகம்? மக்கள் சிந்திக்க வேண்டும். இலவசங்களைக் கொடுத்து இளைஞர்களைச் சோம்பேறியாக்குகின்றனர். 'தமிழ், தமிழ்' எனச் சொல்லி தமிழகத்தையே மூடிவிட்டனர். இலவசத்தைக் கொடுத்து மக்களை வீடுகளுக்குள் அடைத்துவிட்டனர். அவர்கள் சொல்வதை நம்பி ஓட்டுப் போடுகிறோம். இதுவரை நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால், சம்பாதித்த அனைத்தையும் மக்களுக்குக் கொடுத்தவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் என்ற மாபெரும் தலைவரை மக்களாகிய நீங்கள்தான் தவறு செய்து உட்கார வைத்திருக்கிறீர்கள். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஜெகன்மோகன் ரெட்டியைப் பாராட்டுகிறோம். வீட்டுக்கு வீடு ரேஷன் என்ற அவரின் திட்டத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே விஜயகாந்த் சொல்லிவிட்டார். அப்போது அவரைக் கிண்டல், கேலி செய்தீர்கள். அவர் சொன்ன திட்டங்களை நிறைவேற்றினாலே தமிழகம் வல்லரசாகும்'' என ஆவேசமாகப் பேசினார்.

மற்ற செய்திகள்
