சிஎஸ்கே அணியில் அடுத்த வருசம் தோனி விளையாடுவாரா? மாட்டாரா..? குழப்பத்தில் ரசிகர்கள்.. ‘கசிந்த’ முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனியை எடுப்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
துபாய் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் கோப்பையை வென்று சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இந்த சுழலில் அடுத்த ஆண்டு அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. மேலும் புதிதாக இரண்டு அணிகள் இணைய உள்ளன. இதனால் அடுத்த ஆண்டு சென்னை அணியின் சார்பாக தோனி (Dhoni) விளையாடுவாரா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி முடிந்தபின் தோனியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘அடுத்த ஆண்டு எத்தனை வீரர்களை தக்க வைக்க வேண்டும் என தெரியவில்லை. அதனால் பிசிசிஐயின் முடிவைப் பொறுத்துதான் என் ஐபிஎல் எதிர்காலம் இருக்கும். அடுத்த ஐபிஎல் சீசனில் புதிதாக 2 அணிகள் பங்கேற்க உள்ளதால், சிஎஸ்கே அணியின் நலனை கருத்தில் கொண்டு முடிவு செய்வேன்’ என கூறினார்.
மேலும், தான் இன்னும் சிஎஸ்கே அணியில் இருந்து விலகவில்லை என்றும், தற்போதும் அந்த அணியில்தான் இருக்கிறேன் என்றும் தோனி கூறினார். இதனால் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிஎஸ்கே மூத்த நிர்வாகி ஒருவர் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘அடுத்த ஆண்டு எத்தனை வீரர்களை தக்க வேண்டும் என அறிவிப்பு வந்தாலும், நாங்கள் முதலாவதாக தக்க வைக்க (Retention card) உள்ள வீரர் தோனிதான். சிஎஸ்கே என்ற கப்பலை வழி நடத்த தோனி என்ற கேப்டன் நிச்சயம் தேவை’ என கூறியுள்ளார்.
அதேபோல் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் Sportstar ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தோனியை அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணியில் விளையாட வைக்க விரும்புவதாகவும், ஆனால் அதுகுறித்து இன்னும் தோனியிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.