இப்டி ‘தங்கத்தை’ கடத்தி பார்த்ததே இல்ல.. ஒரு ‘பெண்’ உட்பட 10 பேர்.. திருச்சி விமான நிலையத்தை அதிரவைத்த கும்பல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதங்களாக விமானங்கள் இயக்கப்படவில்லை. மத்திய அரசின் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு விமானங்களில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று காலை 5 மணியளவில் துபாயிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் திருச்சி விமானநிலையம் வந்தடைந்தது. அதேபோல் துபாயிலிருந்து மற்றொரு சிறப்பு விமானமும் நேற்று காலை 6 மணி அளவில் திருச்சி வந்தடைந்தது. இந்த விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த விமானங்களில் வந்தவர்களை சுங்க அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அபுதாகிர் மற்றும் சென்னையை சேர்ந்த ஜோகிந்தர் சிங், மைதீன் அகமது, கஞ்சன் சையது இப்ராகிம் மற்றும் கோழிக்கோட்டையை சேர்ந்த நெடும்பிரசாத், இளையான்குடியை சேர்ந்த கஞ்சன் அஜ்மல்கான் ஆகிய 6 பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களை அதிகாரிகள் தனியாக அழைத்துச்சென்று சோதனையிட்டனர்.
அப்போது அவர்கள் தங்களது உடலில் தங்கத்தை பசை போல தடவி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து அவர்கள் 6 பேரிடம் இருந்தும் மொத்தம் 8.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்புடைய ஒரு பெண் உட்பட 4 பேர் என மொத்தம் 10 பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. உடம்பில் பசை போல தங்கத்தை தடவி கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.