“பெட்டியை உடனே திறந்திராதீங்க”.. இரிடியம் என நம்பி திறந்த முதியவர்.. ஆனா உள்ள என்ன இருந்தது தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் இரிடியம் எனக் கூறி செங்கலை வைத்து ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவருக்கு முருகானந்தம், கண்ணப்பன் ஆகிய இருவர் அறிமுகம் கிடைத்துள்ளது. தங்களிடம் இரிடியம் உள்ளதாகவும், இது வேண்டுமென்றால் ரூபாய் 30 லட்சம் எடுத்துக்கொண்டு கோவை வரும்படி மனோகரனிடம் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய மனோகரன், நேற்று முன்தினம் இரவு கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது மனோகரனின் அறைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், முருகானந்தம் அனுப்பி வைத்ததாக அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர் ஒரு பெட்டியை மனோகரிடம் கொடுத்து, அதற்கு இரிடியம் இருப்பதாகவும், அதை உடனே திறக்காமல் சிறிதுநேரம் கழித்து பார்க்கும் படி தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து தான் கொண்டு வந்த 30 லட்ச ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதை பெற்றுக்கொண்ட 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து உடனே தப்பியுள்ளது. பின்னர் முதியவர் பெட்டியை திறந்து பார்த்தபோது அதற்குள் செங்கல் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரன் உடனே சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் முருகானந்தம், கண்ணப்பன் மற்றும் மனோகரனிடம் பணத்தை பெற்றுக்கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இரிடியம் என செங்கலை கொடுத்து முதியவரை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.