"இந்திய ராணுவத்தில் இடம் கிடைக்கல.." உக்ரைனில் பயின்று வந்த தமிழக மாணவர்.. பெற்றோருக்கு தெரிய வந்த தகவலால் அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉக்ரைன் நாட்டில் பயின்று வந்த தமிழக மாணவர் குறித்து உளவுத்துறை சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

உக்ரைனில், கடந்த 13 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இரு நாடுகளிலும் சேர்த்து ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், இந்த போர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
பேச்சுவார்த்தை
நாட்கள் செல்ல செல்ல, போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனின் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்ற வேண்டி, ரஷ்யா வேகமாக ஊடுருவி வருகிறது. உக்ரைன் எங்கும் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், அவர்களின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் சில கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த போதும், அது கை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்திய மாணவர்கள்
அதே போல, உக்ரைன் நாட்டில் சிக்கித் தவித்து வரும் இந்திய மாணவர்கள் பலரை, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு மீட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாநிலத்தைச் சேர்ந்த சாய்நிகேஷ் என்ற மாணவர், உக்ரைன் நாட்டில் தற்போது என்ன செய்து வருகிறார் என்பது பற்றி, சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் அரசு
ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக, உக்ரைன் நாட்டினைச் சேர்ந்த மக்களும், தங்கள் நாட்டைக் காக்க வேண்டி, களத்தில் இறங்கி சண்டை போட்டு வருகின்றனர். அந்த வகையில், மற்ற நாட்டிலுள்ளவர்களும் தங்களின் ராணுவத்துடன் இணைந்து, போரிடலாம் என உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோவை மாணவர்
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த சாய்நிகேஷ் ரவிச்சந்திரன் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு, உக்ரைனில் உள்ள கார்கோ நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் சேர்ந்தார். இவர் தற்போது உக்ரைன் நாட்டின் துணை ராணுவ பிரிவில் இணைந்துள்ளது, இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராணுவத்தில் சேர விருப்பம்
சாய்நிகேஷுக்கு சிறுவயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என விருப்பம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இந்திய ராணுவத்தில் விண்ணப்பித்த போதும், உயரம் காரணமாக சேர முடியாமல் போனது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்குள்ள துணை ராணுவ படையில் சேர, சாய்நிகேஷுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொடர்ந்து விசாரணை
சாய்நிகேஷ் குறித்து விசாரணையை மேற்கொண்ட உளவுத்துறை அதிகாரிகள், கோவை துடியலூர் பகுதியியல் அமைந்துள்ள அவரின் வீட்டையும் சோதனை செய்துள்ளனர். பெற்றோருடன் தொடர்பில் இருக்கும் சாய்நிகேஷ் ஊருக்கு வர விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரின் பெற்றோர்கள் சொந்த ஊருக்கு வரும்படி கேட்டுக் கொண்ட போதும், சாய்நிகேஷ் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் தொடர்நது இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற இந்திய மாணவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வரும் நிலையில், கோவையைச் சேர்ந்த மாணவர் சாய்நிகேஷ், உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்து போர் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
