'மினி கிளினிக்கில் பணிபுரிவதற்காக’... ‘செவிலியர்கள் இந்த விஷயத்தில் யாரிடமும்’... ‘தமிழக அரசு எச்சரிக்கை’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மினி கிளினிக்குகளில் பணிபுரிய செவிலியர்கள், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தொடங்கி வைத்தார். மேலும் பல இடங்களில் தொடங்கப்பட்டும் வருகிறது. காய்ச்சல், தலைவலி உள்பட சிறிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மினி கிளினிக் பணி, நிரந்தர அரசு பணி என கூறி செவிலியர்களிடம் சிலர் பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாக, புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவிக்கும் செவிலியர்களிடம், இது நிரந்த அரசு வேலை என்று பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிலர், இந்த பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் இந்த முறைகேடுகள் சம்பந்தமாக செவிலியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளது. புதிதாக தொடங்கப்படும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் தனியார் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படும் தனியார் நிறுவன பணியாளர்களே ஆவர். இதனால் அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் இந்த கிளினிக்குகளில் பணிபுரிய உள்ள செவிலியர்களுக்கு வழங்கப்படாது. இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்கள் நிரந்தர பணிக்கு உரிமை கோரக் கூடாது என்று அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் நிரந்தரமற்ற, நிச்சயதன்மையற்ற இந்த தனியார் ஒப்பந்த பணிக்கு செவிலியர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். தற்போதைய சூழலில் கடைக்கோடி மக்களுக்கும், மருத்துவ சேவை கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த மினி கிளினிக் திட்டத்தில் பணிபுரிய, விருப்பமுள்ள செவிலியர்கள் இந்த உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டு இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பணிக்கு யாரேனும் உங்களிடம் பணம் கேட்டால், தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
