'அடுத்த மாசம் கல்யாணம்ன்னு எவ்வளவு கனவோடு இருந்தான்'... '26 வயசுல கூட இப்படி ஒரு துயரம் நடக்குமா'?... நொறுங்கி போன மொத்த குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடுத்த நொடி நிச்சயம் இல்லாதது தான் இந்த மனித வாழ்க்கை. அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது என ஆயிரம் கனவுகளோடு இருந்த இளம் காவலருக்கு நடந்த துயரம் அவரது குடும்பத்தையே உலுக்கியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர். 26 வயதான இவர் கடந்த 2018ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்த ராஜசேகர், கடந்த ஆண்டு முதல் அவர் கோவை மாவட்டம் கருமத்தம் பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்குத் திருமணம் செய்யப் பெற்றோர்கள் முடிவு செய்த நிலையில், அடுத்த மாதம் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மருத்துவ விடுப்பு எடுத்திருந்த ராஜசேகர், தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அங்கு விபத்தில் படுகாயமடைந்த தனது நெருங்கிய உறவினரைச் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். அங்கு அவரை சிகிச்சைக்குச் சேர்த்த ராஜசேகர், மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்த இருக்கையில் ராஜசேகர் அமர்ந்த நிலையில், திடீரென நெஞ்சு வலி அதிகரித்து வலியால் கதறியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கிடையே சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்த ராஜசேகரை அங்கிருந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் தூக்கிச் சென்றனர். ஆனால், ராஜசேகர் உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ராஜசேகர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 26 வயதான ராஜசேகருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் உயிரிழந்த விவகாரத்தை அறிந்த குடும்பத்தினர் நொறுங்கிப் போனார்கள். 26 வயதில் இப்படி நடக்குமா, என அவர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.