'வேகம் எடுக்கும் கொரோனா'.... 'நல்ல செய்தி சொன்ன முதல்வர்'... இவங்களுக்கு கண்டிப்பா நன்றி சொல்வோம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பலி குறைவாக இருப்பதற்கான காரணத்தை முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 1.56 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 67 சதவீதம் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்கள். மகாராஷ்டிர மாநிலத்தை ஓப்பிடும் போது, அங்கு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் இறந்துள்ள நிலையில், தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2250 ஆகும். தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம், தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவ சேவை என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க ஈரோடு சென்ற, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மருத்துவத் துறைக்கும், சுகாதாரத் துறைக்கும் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், அரசு கடுமையான நிதிச் சுமையில் உள்ளது என்றும் அதே நேரத்தில், சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளைத் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அரசு விவசாயம் மற்றும் ஜவுளி துறையில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 8,329 சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 350 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதல்வர், அதன் மூலம் கொரோனாவால் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வர உதவும் எனக் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் கொரோனா காலத்தில் மக்கள் நலப்பணி சிறப்பாக நடைபெற்று வருவதாகப் பேசிய முதல்வர், அங்கு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.21.73 கோடி மதிப்பீட்டில் 13 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார். மேலும் ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும். ஈரோடு மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கூடுதல் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று கூறினார். ஈரோடு பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.
கீழ்பவானி கால்வாயை ரூ.985 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. ஈரோடு மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ஈரோட்டில் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை' கட்டும்பணி தொடங்கியுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
