'ஒரு மீட்டர் இடைவெளி, 30 சதவீத டிக்கெட்'... 'அதிரடி கட்டுப்பாடுகள்'... இந்த இடங்களில் முதல்ல தியேட்டரை திறக்கலாம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதாரம் அடியோடு முடங்கியது. மக்கள் கூடும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. இதனால் இதையே நம்பி தொழில் செய்து வந்த பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் முதன்முதலாகப் பரவத்தொடங்கிய சீனாவில், தற்போது கொரோனோத் தொற்று பரவல் குறைந்து வருவதன் காரணமாகப் பல கட்டுப்பாடுகளுடன், ஜூலை 20ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகப் பல அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தன்படி திரையரங்குகளில் உள்ள இருக்கைகளில் 30 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் விற்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் இடைவெளி ஒரு மீட்டர் இருக்க வேண்டும், பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும், வெப்பமானியால் காய்ச்சல் பரிசோதனை செய்தபிறகே பார்வையாளர்களை அரங்கிற்குள் அனுமதிக்கவேண்டும். அதேபோன்று டிக்கெட்கள் டிஜிட்டல் முறையிலேயே விற்கப்பட வேண்டும் என்பன போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா சீனாவில் கோரத்தாண்டவமாடிய நிலையில், ஜனவரி மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் சீனாவில் கொரோனோ பரவலின் வேகம் குறைந்து வந்ததால் திரைத்துறையைச் சார்ந்தவர்களால் திரையரங்குகளைத் திறக்கும்படி தொடர்ச்சியான கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தன, இந்நிலையில் சீன திரைப்படத்துறை நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மற்ற செய்திகள்
