தமிழகத்தில் ஒமைக்ரான்.. தற்போதைய நிலை என்ன??.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்.. மக்களே இனி கவனமா இருங்க..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்னாப்பிரிக்காவில் பரவ ஆரம்பித்த உருமாறிய தொற்றான ஒமைக்ரான், தற்போது 100 நாடுகளுக்கு மேல் வேகமாக பரவி வருகிறது.
டெல்டா வைரஸைக் காட்டிலும், ஒமைக்ரான் தொற்றின் வீரியம் அதிகம் என்றும், பரவும் தன்மையும் வேகமாக இருக்கும் என்பதால், பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
மேலும், இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தாண்டு வருவதையொட்டி, அதனைக் கொண்டாட, மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால், மத்யப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.
தமிழகம் வந்த மருத்துவக் குழு
தமிழகத்திலும், புத்தாண்டை முன்னிட்டு, தனியார் ஹோட்டல்கள் மற்றும் கடற்கரைகளில் கூட பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள 10 மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதன்படி, தமிழகத்திற்கு வந்த மருத்துவ குழு, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
மருத்துவக் குழு ஆய்வு
இதில், மாவட்ட வாரியாக சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் காணொலிக் காட்சி மூலமும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை, கூடுவாஞ்சேரி பகுதிகளுக்கு சென்ற நிபுணர்கள், அங்குள்ள தடுப்பூசி மையம், கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
மேலும், சென்னை விமான நிலையத்திற்கு சென்று, அங்குள்ள பரிசோதனை ஏற்பாடுகளையும், கிண்டியிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை வசதிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். இன்னும் இரண்டு நாட்கள், இந்த மத்தியக் குழு, தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
மத்தியக் குழுவிடம் கோரிக்கை
இந்நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் பற்றிப் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், 'தமிழகத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள், பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருக்கிறது. இதனால், ஒமைக்ரான் தொற்றை உறுதி செய்ய, தமிழகத்திலுள்ள மரபியல் ஆய்வுக் கூடத்தை பயன்படுத்த அனுமதி வேண்டி, மத்திய குழுவினரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
சமூக பரவல்
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்ட நிலைமாறி, தற்போது சமூக பரவல் என்ற நிலையை தமிழ்நாடு எட்டியுள்ளது. மேலும், ஒமைக்ரான் மூலம் பதிக்கப்பட்ட 34 பேரில், 18 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறியுள்ளதால், பொது மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.