1 கோடி மதிப்புள்ள 'பீர்' பாட்டில்கள வச்சுக்கிட்டு... எத்தனை நாளைக்கு இப்டி 'பயந்து' நடுங்குறது?
முகப்பு > செய்திகள் > இந்தியாரூபாய் 1 கோடி மதிப்புள்ள பீர் பாட்டில்களுடன் 11 லாரிகள் விழுப்புரம்-புதுச்சேரி எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.
சரக்குக்கு பெயர் போன புதுச்சேரி மாநிலத்தில் சரக்குகள் தயாரிக்கப்பட்டாலும் கூட கோவா, மங்களூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் சரக்குகள் இறக்குமதி செய்யப்படுவது வாடிக்கை. அந்த வகையில் கோவா மற்றும் மங்களூரில் இருந்து கடந்த மாதம் 21-ம் தேதி ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் 11 லாரிகளில் ஏற்றப்பட்டு புதுச்சேரிக்கு புறப்பட்டன. 22-ம் தேதி அந்த லாரிகள் தமிழக எல்லையான ஓசூருக்கு வந்தபோது ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி அவை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதையடுத்து ஏப்ரல் 14-ம் தேதிவரை லாரிகள் அங்கேயே நின்றதால் மது ஏற்றிச் செல்வதற்கான பர்மிட் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து புதிய பர்மிட் வாங்கிக்கொண்டு புதுச்சேரிக்குக் கிளம்பிய லாரிகள் கடந்த 18-ம் தேதி புதுச்சேரி எல்லைப் பகுதிக்கு வந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் வெளிமாநில வாகனங்களை அனுமதிக்க முடியாது என்று புதுச்சேரி போலீஸ் தெரிவித்து விட்டது. இதனால் தற்போது அந்த லாரிகள் விழுப்புரம்-புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையில் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி கிடைக்காவிட்டால் அந்த லாரிகள் அனைத்தும் கோவாவுக்கு திருப்பி அனுப்பப்படும் என விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை வைத்துக்கொண்டு தினமும் பயந்து, பயந்து நடுங்குவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தீக்குளிப்போம் என்றும் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள், '' நாங்க வீட்டைவிட்டு கிளம்பி 1 மாசமாகுது. சரியா சோறு, தண்ணி கெடைக்காம கஷ்டப்படுறோம். ஊரடங்கு காலத்தில் அங்கங்கே சரக்கை திருடுறாங்க. இதுக்கு மத்தியில நடுரோட்ல இவ்ளோ மதிப்புள்ள சரக்கை வச்சுக்கிட்டு நிக்கிறோம். ஏதாவது சின்னதா சத்தம் கேட்டா கூட குலை நடுங்குது. அதனால எங்களுக்கும் எங்களோட லாரிகளுக்கும் பாதுகாப்பு குடுத்தா போதும்,'' என கோரிக்கை வைத்துள்ளனர்.