மிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா?... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 28, 2020 10:11 PM

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக வெளியான செயற்கைக்கோள் படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

North Korea satellite images spark speculation plans for a massive fun

கொரோனாவை விட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த தகவல்கள் தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. முதலில் அவருக்கு கொரோனா இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இதய அறுவைசிச்சை செய்து கொண்டதாகவும், அதில் அவர் நினைவை இழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அண்டை நாடான தென் கொரியா இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வருகிறது. கிம் நலமுடன் இருப்பதாக தொடர்ந்து தென் கொரியா தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கிம்மின் உடல்நிலை குறித்த தகவல்களை அறிய ஆர்வம் காட்டி களத்தில் குதித்துள்ளன. குறிப்பாக சீனா, அமெரிக்கா இரண்டு நாடுகளும் இந்த போட்டியில் நேரடியாக இறங்கி இருக்கின்றன. கடந்த 11-ம் தேதியில் இருந்து கிம் பொதுவெளியில் தோன்றாததால் அவர் சிகிச்சையில் தான் இருக்கிறாரா? என்ற சந்தேகம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கிம்மின் ட்ரெயின் வடகொரியாவின் வொன்சான் கடற்கரை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள அவரது அரண்மனைக்கு பக்கத்தில் நிற்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவது போன்ற புகைப்படங்கள் அமெரிக்க உளவு செயற்கைக்கோளில் சிக்கியுள்ளது. அதில் ராணுவ அணிவகுப்புகள் மேற்கொள்வதற்காக தற்காலிகமான அமைப்புகள், ஏப்ரல் 18-ம் தேதிக்கு பின்னர் தலைநகர் பியோங்யாங்கில் உருவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்து காணப்படும் வடகொரியா போன்ற ஒரு நாட்டில், இதுபோன்ற மாபெரும் ராணுவ அணிவகுப்பு மேற்கொள்ளுவதற்கான சாத்தியமில்லை என்பதால் இதுகுறித்து சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், இந்த புகைப்படம் தற்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் (கிம்மின் தந்தை) மாரடைப்பால் மரணமடைந்த போதும் இதே போன்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.