இனி ‘இவங்க’ எல்லாம் இ-பதிவு செஞ்சிட்டு வேலைக்கு போகலாம்.. இ-பதிவில் ‘புதிய’ தளர்வு அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இ-பதிவு முறையில் சில புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த சூழலில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனை அடுத்து வரும் 14-ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, கொரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவு உடன் பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் இன்று (07.06.2021) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் ரெயில், விமான நிலையங்களுக்கு வீட்டில் இருந்து செல்லும் போதும், அங்கிருந்து வீட்டிற்கு வரும்போதும், பயணத்திற்காக செய்யப்பட்ட இ-பதிவு விவரங்கள், பயணச்சீட்டு, அடையாள சான்று ஆகியவை இருந்தால்தான் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் தனியொருவர் செல்ல வேண்டும் என்றால், மருத்துவ அவசர காரியங்கள் மற்றும் இறுதிச்சடங்குகளுக்கு மட்டும் இ-பதிவுடன் செல்லலாம். மாவட்டத்திற்கு உள்ளே மருத்துவ அவசர காரியங்கள், இறுதிச் சடங்குகளுக்கு இ-பதிவு இல்லாமல் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி கிடையாது. இதனை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில் இ-பதிவு முறையில் சுயதொழில் செய்பவர்களுக்காக புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதில் மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், எலக்ட்ரீசியன்கள் மற்றும் தச்சர் போன்ற சுய தொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவு உடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இ-பதிவில் புதிதாக இது சேர்க்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
