தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பா..? மருத்துவ வல்லுநர்கள் குழு முக்கிய பரிந்துரை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை தினசரி பாதிப்பு 7 ஆயிரம் வரை இருந்தது. ஆனால் அது தற்போது 2 ஆயிரமாக குறைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இதேபோல் நோய் தொற்று குறைந்து வருகிறது.
கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி வந்தது. அதில், சென்னையையும் தாண்டி கோவையில் திடீரென கொரோனா புதிய உச்சத்தை அடைந்தது. ஆனால் இப்போது அந்த மாவட்டங்களிலும் கணிசமாக பரவல் குறைய தொடங்கியது. கோவையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 2,900 ஆக குறைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 7-ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது நோய்த்தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அளிக்கலாமா ? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துவரும் மாவட்டங்களில் சில தளர்வுகளை அளிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.