முழு ஊரடங்கை படிப்படியாக தளர்த்த முடிவா..? ஆலோசனை கூட்டத்தில் நிபுணர் குழு பரிந்துரைத்தது என்ன..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக குறைப்பது குறித்து நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் பாதிப்பு குறையாததை அடுத்து தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு வருகிற 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த நிபுணர் குழு, ‘சென்னை மண்டலத்தில் பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் மேற்கு மண்டலத்தில் சில பகுதிகளில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மண்டலத்துக்குள்ளே ஈரோட்டில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கோவையில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.
குறைந்த தொற்று விகிதம் மற்றும் காலியான மருத்துவமனை வார்டுகளை கொண்ட ஒரு மண்டலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதில் அர்த்தமில்லை. மாவட்ட அளவிலான தொற்று நோய் காரணிகளின் அடிப்படையில் தடைகளை நீட்டிப்பது அல்லது குறைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும். பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பில் வித்தியாசங்கள் நிலவுவதால் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்தலாம். முதலில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்து திறக்கலாம்’ என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’ என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.