"கோவிலில் விஐபி வரிசை.. கடவுளே மன்னிக்கமாட்டாரு".. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி போட்ட உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்யும் முறை குறித்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
விஐபி வரிசை
பொதுவாக தமிழக கோவில்கள் மட்டுமல்லாது பிற மாநில கோவில்களிலும் சிறப்பு கட்டண தரிசன சேவை நடைமுறையில் இருந்து வருகிறது. கூடுதல் கட்டணம் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இந்த நடைமுறையில் பல சிக்கல்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி கொடுப்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
வழக்கு
நேற்று, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களை ஒழங்குபடுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது "விஐபி, விவிஐபி என கோவில்களில் மக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்" என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளும் சக பொதுமக்கள் போலவே நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கோவிலின் கட்டளைதாரர்கள் 10 நிமிடம் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படலாம் எனக் குறிப்பிட்டார்.
"விஐபி தரிசனம் மூலம் தேவை இல்லாத பல பிரச்சினைகள் எழுந்து வருகிறது இதன் மூலம் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். மத நம்பிக்கை உள்ளவர்களே கோவிலுக்கு வருகின்றனர். கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி" என நீதிபதி குறிப்பிட்டார்.
சுகாதாரம்
திருச்செந்தூர் கோவிலின் உள்ளே குப்பை தொட்டிகள் அமைப்பதுடன், கோவிலின் உள் மற்றும் வெளிப் பகுதிகள் சுத்தமாக இருத்தல் வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, நாழிக் கிணறு பகுதியை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் உடை மாற்ற போதிய வசதிகள் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கூடுதல் போலீசார்
"தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோவிலில் 40 ஆயுதப்படை காவல்துறையினரை நியமிக்க வேண்டும். அவ்வப்போது சூழ்நிலைகளைப் பொறுத்து காவல்துறையினரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்" என உத்தரவிட்ட நீதிபதி, அனைத்து உத்தரவுகளையும் 3 வாரத்தில் நடைமுறைப்படுத்த பட வேண்டும் என அறிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் ஏப்ரல் 15 ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
VIDEO: இதனாலதான் எல்லாருக்கும் இந்த மனுசன பிடிக்குதோ..! வைரலாகும் ‘வார்னர்’ வீடியோ..!