"ஆர்டர் செஞ்சது சுகர் டெஸ்ட் பண்ற கருவி.. ஆனா, வீட்டுக்கு வந்த பார்சல்'ல இருந்தது.." ஓப்பன் செய்ததும் திகைத்து போன முதியவர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை : ஆன்லைன் மூலம், சுகர் அளவை பரிசோதனை செய்யும் கருவியை ஆர்டர் செய்த நபருக்கு வேறொரு பொருள் வந்து சேர்ந்ததால், அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

கொரோனா தொற்றிக்கு பிறகான நாட்களில், அதிக கட்டுப்பாடுகளின் பெயர்களில் வீட்டிலேயே மக்கள் இருப்பதால், தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்க அதிக விருப்பம் காட்டி வருகின்றனர்.
பொது இடங்களுக்கு சென்று, அலைந்து திரிந்து பொருட்களை தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், ஆன்லைன் மூலம் பொறுமையாக தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் தேடி, பொருட்களை ஆர்டர் செய்கின்றனர்.
மாற்று பொருள்
இப்படி நாம் மிக பொறுமையாக ஆர்டர் செய்து, நமக்கு வரும் பார்சலில், நாம் நினைத்து கூட பார்க்காத பொருள் இருப்பது, அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, பல இடங்களில் தாங்கள் ஆர்டர் செய்யும் விலையுயர்ந்த பொருட்களுக்கு பதிலாக, கற்கள், சோப் உள்ளிட்ட பல பொருட்கள் இருப்பதை நாம் செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் படித்திருப்போம்.
சர்க்கரை நோய் பாதிப்பு
தற்போது அப்படி ஒரு சம்பவம் தான், மதுரையைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு நடந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பசுமலை ரைஸ்மில் ரோட்டைச் சேர்ந்தவர் ஜெய்சிங் ராசையா (வயது 74). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, ஜெய்சிங் ரசய்யாவின் மனைவிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்டர் செய்த மகன்
இதனால், வாரத்திற்கு 5 முறை சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு வேண்டி, 2 மாதத்துக்கு ஒரு முறை, ஆன்லைன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் காட்டும் கருவியை, வெளிநாட்டில் இருக்கும் ஜெய்சிங் மகன் ஆர்டர் செய்து கொடுத்து வருகிறார்.
திகைத்து போன முதியவர்
இந்நிலையில், வழக்கம் போல சர்க்கரை அளவீடு கருவியை ஜெய்சிங்கின் மகன், சமீபத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், இந்த தடவை வந்த பார்சலில் கருவிக்கு பதிலாக, இரண்டு காலாவதியான சாக்லேட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட ஜெய்சிங், அதிர்ச்சி அடைந்துள்ளார். சுகர் அளவீடு கருவிக்கு பதிலாக, சாக்லேட்டுகள் இருந்ததால், முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் திகைத்து போயுள்ளார் ஜெய்சிங் ராசையா.
புகார்
இதனைத் தொடர்ந்து, பொருளை ஆர்டர் செய்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் மைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால், அவர்களிடம் இருந்து ஜெயசிங்கிற்கு சரியான தகவல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ஜெய்சிங் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், அவர்கள் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
