‘அரியர் தேர்வு ரத்து வழக்கு’.. வீடியோ கான்ஃபரன்சிங்கில் குவிந்த மாணவர்கள்.. சேட் பாக்ஸில் வந்த ‘மெசேஜ்’.. கடுப்பான நீதிபதிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியர் தேர்வுகள் ரத்து தொடர்பான வழக்கு விசாரணையை பார்க்க நூற்றுக்கணக்கானவர்கள் வீடியோ கான்ஃபரன்சிங்கில் நுழைந்ததால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, இன்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அதில், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, இன்று 26-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆன்லைன் விசாரணையில் லாக் இன் (Log in) செய்தனர். மொத்தம் 350 பேர் வரை லாக் இன் செய்திருந்தனர். ஆனால் பலர் ஆடியோவை மியூட் செய்யாததால், வீடுகளின் தொலைக்காட்சி ஒலி, குழந்தைகள் சப்தம் உள்ளிட்டவைகளால் இடையூறுகள் ஏற்பட்டன.
இதனை நீதிபதிகள் எச்சரித்தும் பலனில்லாததால், வழக்கு விசாரணையை நீதிபதிகள் நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து தேவையில்லாமல் லாக் இன் செய்தவர்களை வெளியேறும்படி சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனாலும் எவரும் வெளியேறவில்லை. இதனால் தேவையில்லாதவர்களை நீதிமன்ற பணியாளர்கள் நீக்கினர்.
இந்தநிலையில் சேட் பாக்ஸில் ‘அய்யா பாஸ் பண்ணி விடுங்க’ என மாணவர்கள் மெசேஜ் அனுப்பியதால் நீதிபதிகள் கோபமடைந்தனர். கடந்த விசாரணையின் போதும் இதேபோல் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று இடையூறு ஏற்படுத்தினர். அப்போது மாணவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.