மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வைர மூக்குத்திகளை திருடிச்சென்ற மர்ம நபர்.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் மர்ம நபர் ஒருவர் காளியின் வைர மூக்குத்திகளை திருடிச் சென்றிருக்கின்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மடப்புரம் பத்ரகாளியம்மன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகிலிருக்கிறது மடப்புரம். இங்குள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் இந்த திருக்கோவிலில் பிரம்மாண்ட குதிரை வாகனம் உள்ளது. இந்த குதிரையின் கீழே ஆக்ரோஷமாக காட்சி கொடுக்கிறார் பத்ரகாளியம்மன். இங்கே அம்மனுக்கு இரண்டு வைர மூக்குத்திகளும் அணிவிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டும் அல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் இந்த கோவிலுக்குள் நுழைந்து இருக்கிறார். பச்சை துண்டை முகத்தில் சுற்றியபடி உள்ளே நுழையும் அவர் ஆள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை கவனித்து காளி சிலை இருக்கும் பகுதிக்கு செல்கிறார். இதனை அடுத்து, குதிரை சிலையின் மீது ஏறி, அம்மன் முகத்தில் அணிவிக்கப்பட்டிருந்த இரண்டு வைர மூக்குத்திகளையும் அவர் எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
புகார்
இந்நிலையில், அடுத்தநாள் காலை கோவில் திறக்கப்பட்ட போது காளியின் வைர மூக்குத்திகள் திருடு போயிருப்பது கோவில் நிர்வாகிகளுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ந்துபோன அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்திருக்கின்றனர். சம்பவம் நடந்த அன்று முன்னாள் ராணுவ வீரர் தலைமையில் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கோவிலுக்கு விரைந்து வந்த காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வைர மூக்குத்திகள் திருடுபோன சம்பவம் பக்தர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.