"சிமெண்ட், கம்பி எதுவும் இல்ல".. தயிர், முட்டை எல்லாம் MIX பண்ணி தயாரான அரண்மனை வீடு.. "எப்படி பாஸ் சாத்தியம் ஆச்சு?"
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொடைக்கானல் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான ஒரு வீடு தொடர்பான செய்தி தற்போது பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.

கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பல்லங்கி கிராமத்தை ஒட்டி உள்ள அலத்துரை என்னும் கிராமத்தில் தான் இந்த வீடு அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரிதா மற்றும் சிம்ரத்மல்லி தம்பதியினர் இயற்கை மூலப்பொருட்களை மட்டுமே கொண்டு இந்த வீட்டை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ரசாயன பொருளட்களின் கலவை எதுவும் இல்லாத வீடாக பார்க்கப்படும் இந்த வீட்டை ஒரு துளி சிமெண்ட் கூட சேர்க்காமல் கிளிஞ்சல் சுண்ணாம்பு, கல் சுண்ணாம்பு, மணல், கருப்பட்டி, புளி, கடுக்காய், தயிர், முட்டை, கருங்கல், இயற்கை மூலிகை சாறுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கலந்த கலவையை கொண்டு எந்தவித ரசாயனமும் இல்லாமல் இந்த வீட்டை கட்டி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களைப் போல் இறுக்கமான பொருட்களை கொண்டு மட்டுமே இந்த வீட்டை அமைத்துள்ளதாகவும் தெரிகிறது.
தரைத்தளத்தில் இரண்டு அறைகள் மேல் தளத்தில் இரண்டு அறைகள், முன்புறம் வராண்டா என அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டை வடிவமைப்பதற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவானதாக இதனை வடிவமைத்த குமார் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த வீட்டைப் போலவே இதன் உரிமையாளர் கோவாவிலும் ஒரு சிறிய அளவிலான ரிசார்ட்டை அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த நபர் கூட இயற்கை உணவுகளே அதிகம் உண்டு வருவதாகவும் இயற்கையாக தயாரிக்கப்பட்ட சோப்பு, ஷாம்புக்கள் உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ரசாயன பொருட்கள் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது பலரின் லைக்குகளை அள்ளி வருகிறது.

மற்ற செய்திகள்
