"கிச்சன் ஒரு நாட்டுல.. டைனிங் டேபிள் ஒரு நாட்டுல".. வீட்டுக்குள் போடப்பட்ட எல்லைக்கோடு.. இப்படியும் ஒரு இடமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த பகுதியில் இருக்கும் இடங்கள் பாதி பெல்ஜியத்திற்கும் பாதி நெதர்லாந்துக்கும் சொந்தமானவை. இதுவே இங்கு வரும் மக்களுக்கு பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
![a town where homes have country borders right through middle a town where homes have country borders right through middle](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/a-town-where-homes-have-country-borders-right-through-middle.jpg)
எல்லை
மனிதன் நாடோடிகளாக இருந்து தமக்கென வாழும் பகுதியை தீர்மானிக்க துவங்கிய நாளில் ஆரம்பிக்கிறது இந்த எல்லை பிரச்சனைகள். நிலப்பரப்பில் கோடு கிழித்து இது தங்களின் நாடு என போர்டு வைத்து வருவதையே பல ஆண்டுகளாக மனிதர்கள் செய்துவருகிறார்கள். தீவு பகுதி என்றால் இந்த சிக்கல் ஏதுமில்லை. ஆனால், சுற்றிலும் நிலங்களில் சூழப்பட்ட நாடாக இருந்தால் எல்லை பிரச்சனைகள் எந்த அளவு இருக்கும் என்பதை நாம் பல நேரங்களில் உணர்ந்து தான் இருக்கிறோம். பொதுவாக முள்வேலிகள், பாதுகாப்பு அதிகாரிகள் முகாமிடும் எல்லை பகுதிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், சாவகாசமாக நடந்து செல்லக்கூடிய எல்லைகளும் உலகின் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் பார்லே-ஹெர்டாக்.
பார்லே-ஹெர்டாக் என்பது நெதர்லாந்தில் உள்ள எல்லையில் உள்ள ஒரு பெல்ஜிய நிலப்பகுதியாகும். இங்கு உள்ள நெதர்லாந்து இடம் பார்லே-நாசாவ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரே இடத்தை இரண்டாக பிரித்து பெல்ஜியத்துக்கு சொந்தமான இடம் பார்லே-ஹெர்டாக் என்றும், நெதர்லாந்துக்கு சொந்தமான இடம் பார்லே-நாசாவ் என்றும் அழைக்கப்பட்டுவருகிறது.
சிக்கல்
சிறிய க்ராஸ் குறிகளின் மூலம் இந்த எல்லை பகுதிகள் பிரிக்கப்படுகின்றன. இந்த எல்லைக்கோடு சில வீடுகளின் வழியாகவும் பயணிக்கிறது. இதனால் சிலரது வீட்டின் சமையலறை நெதர்லாந்திலும், டைனிங் டேபிள் பெல்ஜியத்திலும் அமைந்திருக்கின்றன. வீட்டின் வழியாக எல்லை கோடுகள் சென்றாலும் வீட்டின் முகப்பு பகுதி எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த வீட்டுக்காரரும் அந்த நாட்டை சேர்ந்தவர் ஆகிறார். இருப்பினும் இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதாவது எல்லைக்கோடு வீட்டின் முன்பகுதி, பின்பகுதியென பிரிக்காமல் வாசலை இரண்டாக பிரிக்கும் வீடுகளும் இங்கே இருக்கிறன்றன. இப்போது புரிகிறதா? இந்த சிக்கலின் உயரம். ஆனாலும் இங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.
பார்லே-ஹெர்டோக் மற்றும் பார்லே-நாசாவில் இரண்டு அரசாங்கங்கள், இரண்டு கவுன்சில்கள், இரண்டு மேயர்கள் மற்றும் இரண்டு பள்ளிகள் உள்ளன. பிளெமிஷ் மற்றும் டச்சு ஆகிய இரண்டு மொழிகளும் இரண்டு இடங்களின் அதிகாரப்பூர்வ மொழியாகும். ஆனால், இங்கு வசிப்பவர்கள் இரண்டு மொழிகளையும் பேசுகின்றனர்.
வித்தியாசம்
கொரோனா காலத்தில் இந்த இடத்தில் இன்னும் சிக்கல்களை உருவாக்கியது. 2020 ஆம் ஆண்டில் பெல்ஜிய அரசாங்கம் கடைகள் போன்ற பொது இடங்களில் அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்ற விதிகளை விதித்தது. அதே நேரத்தில் நெதர்லாந்தில் பொது போக்குவரத்தில் முககவசங்கள் அணிந்தால் போதுமானது என அறிவித்திருந்தது. ஆனால், இங்குள்ள மக்கள் அதற்கும் பழகிக்கொண்டார்கள் என்றே சொல்லவேண்டும். இந்த வித்தியாசம் ஏற்படுத்தும் ஈர்ப்பின் காரணமாக ஐரோப்பிய சுற்றுலா செல்பவர்கள் இந்த சிறிய நகரத்துக்கு படையெடுத்து வருகிறார்கள்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)