ILAIYARAAJA : "என் அம்மாவும் பிரதமரின் அம்மா மாதிரி தான்.. நான் எதுவுமே கொடுத்தது இல்ல" - இளையராஜா உருக்கம்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய திரை இசையமைப்பாளர்களில் முக்கியமானவர்களுள் ஒருவராக கருதப்படுபவர் இளையராஜா. அன்னக்கிளி துவங்கி பல வெற்றிப் படிக்கட்டுக்களில் அவர் ஏறியிருக்கிறார். தமிழ் மட்டும் அல்லாது பல மொழிகளில் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
முன்னதாக காசி தமிழ் சங்க விழாவின் இறுதி நாட்களில் இசைஞானி இளையராஜா காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டார். பின்னர் இசை கச்சேரியும் நடைபெற்றது. இவ்விழாவில் தேவாரம், திருவாசகம் மற்றும் பாரதியார் பாடல்கள் என பலவற்றை இளையராஜா பாடியிருக்கிறார். அதேபோல. தமிழ் மட்டும் அல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பாட, அங்கு வந்திருந்த அனைவரும் அதனை ரசித்தனர்.
பின்னர், புண்ணிய பூமி காசி நகரில் காசி தமிழ் சங்கமத்தை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் நம்முடைய பிரதமர் அவர்களுக்கு எப்படி தோன்றியது என்பதை குறித்து, தான் வியந்து போவதாக சொல்லி மோடியை பார்த்து புகழாரம் சூட்டினார். அப்போது பிரதமர் மோடி கைகூப்பி நன்றி தெரிவித்தார். இந்நிலையில், “பிரதமருக்கு தாயாக இருந்தாலும், தன் மகனான நாட்டு பிரதமரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத ஒரு தாய்” என்று பிரதமர் மோடி தாயாரின் மறைவு குறித்து இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 99 ஆகும். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தன் கைப்பட எழுதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் குறிப்பில், “நமது பாரத பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தியைக் கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன்.
பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய்! எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதுவுமே கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கும் காண முடியுமோ? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் அவர்கள் துயரத்தில் நான் பங்கு கொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்! இறைவனடி - இளையராஜா” என்று குறிப்பிட்டுள்ளார்.