காமராஜரின் நினைவுதினமும், காந்தி பிறந்த அக்டோபர் 2 தானே?.. 'கண்டுகொள்ளப் படவில்லையா 'கருப்பு காந்தி'?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 03, 2019 05:44 PM

‘கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும் சமதர்ம சமுதாயம் மலர, வன்முறை தேவையில்லை. கல்வியும் உழைப்பும் போதுமானது’,‘பொதுத் தேர்தலில் பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவின்றி ஒருநாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது’- காமராஜரின் மிக முக்கியமான பொன்மொழிகள்தாம் இவையிரண்டும்.

Kamarajar ignored on Gandhi\'s birth anniversary

எம்.ஜி.ஆர், அண்ணா ஆட்சிகளை வழங்குவது இலக்கு என்றால், காமராஜரின் ஆட்சியை வழங்குவதே கனவு என்று முழக்கமிடாத தமிழ்க் கட்சிகளும் இல்லை, தமிழ்நாட்டில் பெரும்பான்மை சீட்களை பிடிக்க முயலும் தேசியக் கட்சிகளுல் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அளப்பரியது தமிழ்-இந்திய ஜனநாயக அரசியலில் காமராஜரின் பங்கு.

விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் சித்தாந்தத்துக்கு, அடித்தளமிட்டது காந்தி என்றால், அந்த அரசியலை ஆக்கப்பூர்வமாக மாற்றிய பெருமைக்குரியவராக ஏகோபித்த மக்களால் கருதப்பட்டவர் காமராஜர். எனவேதான், அவரது ஆட்சியைத் தருவதெங்கள் கனவு என்று பல கட்சிகளும் பிரகடனம் செய்தன. ஆனால் இந்திய விடுதலைப் போரினை அஹிம்சை வழியில் நின்று முடிவுக்குக் கொண்டு வந்த காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் நாள் அன்றுதான், இந்தியக் குடியரசாட்சிக்குப் பின்னர், காங்கிரஸின் சார்பில் தமிழக அரசியல் களத்தில் நின்று, வென்று கடைக்கோடி தமிழர்களையும் தனது எளிமையாலும், எளியோர்க்கு அளித்த அருமையான திட்டங்களாலும் கவர்ந்த காமராஜர் மறைந்தார். அவர் இறந்தபோது அவரிடமிருந்தந்து என்னவோ 60 ரூபாய் பணமும், 10 கதர் வேட்டிச் சட்டையும்தான் என்று ஆன்றோர்கள் சொல்வதுண்டு.

ஆனால், தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலைக்கு மட்டும் மாலை அணிவித்து அவரது பிறந்த நாளைக் கொண்டாடிய இன்றைய மாநில, தேசிய அரசியல் தலைவர்கள் பலரும் அதே தினத்தில் மறைந்த வரலாற்றுத் தலைவரான கர்ம வீரர் காமராஜருக்கு மாலையிட்டு அவரது நினைவுதினத்தை அனுசரிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர் என்கிற செய்தி பலரிடையே விவாதப் பொருளாகி வருகிறது.

தமிழக முதல்வர், துணை முதல்வர்கள் படாடோபம் சூழ, சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு மாலையிட்டு மலர் தூவினர். ஆனால் அந்த சிலைக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் உள்ள காமராஜர் சிலை, குறைந்தபட்சம் காங்கிரஸாரால் கூட கண்டுகொள்ளப்படாமல் இருந்துள்ளதுதான் முன்னாள் முதல்வராக பொறுப்புடன் இருந்த, கருப்பு காந்தியின் இந்நாள் நிலை!

ஆனால் இதுபற்றி பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி, சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட இடங்களில் காமராஜரின் நினைவினை தங்கள் கட்சியினை அனுசரித்ததாகவும், மெரினா போன்ற இடங்களில் உள்ள சிலைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருவதால், அவற்றிற்கு மரியாதை செலுத்தும் பொறுப்பு அரசை சாராத அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டவற்றைத் தாண்டி, அரசின் பொறுப்பும் கடமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

Tags : #CONGRESS #AIADMK #KAMARAJAR #MAHATMAGANDHI #OCT2ND