"2 மாசம் மறைச்சு வெச்சு.. விமானத்துல பயணிகளை அனுப்பி.. இந்த வேலையை பாத்துருக்காய்ங்க"! .. 'டிரம்ப்பை' தொடர்ந்து 'சீனாவை' டிசைன் டிசைனாக 'வறுத்தெடுக்கும்' வெள்ளைமாளிகை அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனிடையே “சீனாவில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது” என்று தொடங்கி பல்வேறு விமர்சனங்களை சீனாவின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்திருந்தார். ஆனால், “உண்மையில் கொரோனா வைரஸ் சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டதே தவிர, அது சீனாவில் உருவானது அல்ல” என்று டிசைன் டிசைனாக சீனா விளக்கம் கொடுத்தும் அமெரிக்காவோ டிரம்போ, அதை ஏற்பதாக இல்லை.
இதனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு எதிரான பிரச்சாரத்தை சீனா கடுமையாக முன்னெடுத்தது என்றே சொல்லலாம். ஆனாலும் தினமும் வெள்ளை மாளிகை சந்திப்பில் டிரம்ப் தொடங்கி, அமெரிக்க அதிகாரிகள் பலரும் கொரோனா விஷயத்தில் சீனாவை வறுத்து எடுக்காமல் இல்லை. தற்போது அதிபர் டிரம்பின் உதவியாளர் பீட்டர் நவாரோவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். வெள்ளை மாளிகையில் வர்த்தக ஆலோசகராக இருக்கும் பீட்டர் நவாரோ, கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் கொரோனா வைரஸ் முதன்முதலாக உருவானதாகவும், உலக சுகாதார அமைப்பை தனது பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்திக்கொண்ட சீனா சுமார் 2 மாதங்களுக்கு உலகத்திடம் இருந்து கொரோனா குறித்த தகவல்களை மறைத்து வைத்து, நியூயார்க், மிலன் உள்ளிட்ட உலகப் பெருநகரங்களுக்கு ஆயிரக்கணக்கான பயணிகளை அனுப்பியதன் மூலம் அங்கெல்லாம் கொரோனாவை சீனா விதைத்ததாகவும், இதனால்தான் இந்த நகரங்கள் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இதற்கு முன்னாள் பதவிகளில் இருந்த ஒபாமா மற்றும் ஜோபிடன் உள்ளிட்டோர் கட்டமைத்து வைத்திருந்த தேசிய நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு மைய அமைப்பின் பணிகளில் இருந்த குறைபாடும் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்ததாக கூறிய நவாரோ, பல மருத்துவ ஊழியர்கள் கொரோனா நோய் மறைந்த பின்னர் வெளியே வரலாம் என்கிற யோசனையில் சென்று மறைந்துகொண்டதாகவும், இது உடல் நலத்துக்கும் பொருளாதாரத்துக்குமான போர் இல்லை, உடல்நலத்துக்கும் உடல்நலத்துக்குமான போர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறு கொரோனாவுக்கும் சீனாவுக்குமான தொடர்பு பற்றி பேசி, சீனாவை வறுத்தெடுப்பது இது முதல்முறை அல்ல என்றாலும், அமெரிக்க அரசின் செயலாளராக இருக்கும் மைக்கேல் பாம்போ, சீனா நினைத்திருந்தால் கொரோனாவை அவர்கள் நாட்டுக்குள் மட்டுமே கட்டுக்குள் வைத்திருந்திருக்க முடியும் என்றும், ஆனால் அவர்கள் தான் அதை பெரும் தொற்றாக மாற்றிவிட்டதாகவும், அமெரிக்காவுக்கு கொரோனா விஷயத்தில் நேர்ந்த அத்தனைக்கும் சீனாவே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.