'இதெல்லாம் கண்டிப்பா நீங்க பின்பற்றணும்!'.. தமிழகத்தில் சலூன் கடைகள் இயங்க அனுமதி!.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 18, 2020 06:42 PM

ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

tamil nadu govt lifts lockdown for salons in panchayats

தமிழகத்தில் ஊரடங்கால் வேலையின்றி இருக்கும் தங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டுமென முடி திருத்தும் தொழிலாளர்கள் (சலூன் கடைக்காரர்கள்) கோரிக்கை விடுத்து வந்தனர். பல இடங்களில் இதற்காக போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நேற்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.  25 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இந்த தளர்வின் ஒரு பகுதியாக ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதியில்லை.

சலூன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தினந்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தும்பொழுது, கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். அடிக்கடி சோப்பு கொண்டு கைகளை கழுவுவது அவசியம் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.