legend updated recent

‘விடாது கொட்டிவரும் கனமழை’... ‘பாதிப்புக்குள்ளாகும் கரையோர மக்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 09, 2019 03:54 PM

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

heavy rain hit in kovai, nilgiris, emergency number announced

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 5-வது நாளாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று அவலாஞ்சியில், அதிகபட்சமாக 82 செ.மீ மழை பதிவானது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கோவை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த செவ்வாய்கிழமை இரவில் பெய்யத்தொடங்கிய மழை, விடிய விடிய பெய்தது. பின்னர் காலை நேரத்தில் சிறிது நேரம் நின்ற மழை பின்னர் காலை 8 மணியில் இருந்து தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக கோவையில் உள்ள முக்கிய ரோடுகளான அவினாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்பட அனைத்து ரோடுகளின் ஓரத்தில் மழைநீர் ஆறுபோன்று ஓடியது. கோவை அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. அதுபோன்று வடகோவை மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

தொடர் மழை காரணமாக பொதுமக்கள் பலர் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், `தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பவானி மற்றும் நொய்யல் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்குச் செல்லவும். அவசர உதவிக்கு, 0422 2390261, 2390262, 2390263, 8190000200 (வாட்ஸ் அப்), 7440422422 ஆகிய உதவி எண்களைத் தொடர்புகொள்ளலாம்’ என்று கூறியுள்ளது. இதேபோல் திருப்பூரில் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tags : #HEAVYRAIN #LASHES #KOVAI #NILGIRI