'கால் வயிறு கஞ்சியாவது குடிக்கணுமே'... 'சமைக்கிற பொருள் எல்லாம் கழிவறைக்குள்'... 'முதியவர் சொன்ன காரணம்'... நெஞ்சை நொறுக்கும் அவலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரத்தில் முதியவர் ஒருவர் சமைக்கும் பொருட்களை எல்லாம் கழிவறைக்குள் வைத்துப் பாதுகாக்கும் அவலம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் துளசாபுறம் ஊராட்சி கண்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். கூலி வேலை செய்து வரும் இவருடைய மனைவி 30 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 20 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற அவரது மகனும் தற்போது எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் 85 வயது தாய் ரஞ்சிதம் அம்மாளுடன் ஓலை வீட்டில் குப்பன் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் முதியவர் குப்பனுக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடலில் அறுவை சிகிச்சையும் அவர் செய்து கொண்டார்.
அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவரால் முன்பு போன்று எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் ஊர் மக்கள் சிலர் செய்யும் உதவிகளை வைத்துக் கொண்டு தனது தினசரி வாழ்க்கையை அவர் நடத்தி வந்துள்ளார். இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், இவரது வீட்டில் கதவு இல்லாத காரணத்தினால் உணவுப் பொருட்களைப் பாதுகாக்க முடியவில்லை. இதனால் உணவுப் பொருட்களைக் கழிவறைக்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முதியவர் குப்பன் கூறும்போது, ''ஓலை குடிசை வீடு ஆங்காங்கே விரிசல் விட்டு அபாயகரமாக உள்ளது. மழைக் காலங்களில் மழை நீர் வீட்டினுள் புகுந்து விடும். வெறும் துணியால் மட்டுமே கதவைப் பூட்டி வைத்திருக்கிறோம். தினமும் சமைக்க ஊர் மக்கள் சிலர் பொருட்களைத் தந்து உதவி செய்து வருகிறார்கள். வீட்டில் கதவு இல்லாததால் வீட்டில் சமைத்து வைக்கும் பொருட்களை எலி, பூனை எடுத்துவிட்டுச் சென்று விடுகிறது. இதனால் உணவுப் பொருட்களைக் கழிவறைக்குள் வைத்துப் பாதுகாக்கின்றோம். பலமுறை முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்தும் எனப் பலனும் இல்லை'' என வேதனையுடன் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஜூலை மாதம் நடைபெற்ற ஆன்லைன் ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகைக்கா முதியவர் குப்பன் விண்ணப்பித்துள்ளார். மனுவை ஏற்றுக்கொண்ட மேலதிகாரிகள் அந்த மனுவைக் கிராம நிர்வாக அலுவலரின் மேற்பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் நேரில் வந்து ஆய்வு செய்யாமல் வயது தகுதி இல்லை என்று அந்த மனுவை நிராகரித்து விட்டதாக முதியவர் குப்பன் கூறியுள்ளார். எங்களது நிலையைக் கருத்தில் கொண்டு அரசு உதவி செய்ய வேண்டும் என வேதனையுடன் கூறியுள்ளார்.