‘தினமும் ஏன் இப்டி குடிச்சிட்டு வர்ரீங்க?’.. கேள்வி கேட்ட ‘காதல் மனைவி’.. கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் செய்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுபோதையில் நான்கு மாத கர்ப்பிணி மனைவியை காதல் கணவன் கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி (25). இவரது மனைவி தேவி (21). இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு காதல் திருமணம் செய்துள்ளனர். தேவி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான ஹரி, தினமும் குடித்துவிட்டு தேவியிடம் தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சம்பத்தன்றும் மதுபோதையில் வந்த ஹரி, மனைவி தேவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் கடப்பாரை கம்பியை எடுத்து கர்ப்பிணி என்றும் பாராமல் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தேவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து கணவர் ஹரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார்,‘ஹரி மற்றும் தேவி இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களது காதலுக்கு தேவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காவல்நிலையத்தில் வைத்து இருவருக்கும் ஆலோசனை வழங்கினோம். அப்போது ஹரியை திருமணம் செய்ய தேவி சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில் ஹரிக்கும், தேவிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
தேவியின் கணவர் ஹரி மதுபோதைக்கு அடிமையானவர் என்பது அவருக்கு தெரியாது. திருமணத்துக்கு பின்னர் ஹரி தினமும் குடித்துவிட்டு வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சம்பத்தன்றும் ஹரி மதுபோதையில் வந்துள்ளார். அப்போது தினமும் குடித்துவிட்டு வருவதாக குறித்து ஹரியிடம் தேவி கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஹரி கடப்பாரை கம்பியால் தேவியை அடித்துக் கொலை செய்துள்ளார். தற்போது ஹரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’ என தெரிவித்துள்ளனர். கர்ப்பிணி என்றும் நினைக்காமல் மதுபோதையில் கடப்பாரையால் காதல் மனைவியை அடித்து கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
