'மலை' உச்சியில் பற்றிய "தீ"... கருகிப் போன பல ஏக்கர் "காடுகள்"... "கடம்பூர்" மலையில் நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது கடம்பூர் மலை. அங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் மலை உச்சியில் அமைந்துள்ள கம்பத்தராயன் கிரி என்னும் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக சுமார் இரவு 7 மணியளவில் தீ பற்றி எரிந்திருக்கிறது. காட்டுத்தீ அதிகமாக பரவியதையடுத்து அதனை வெகு தொலைவில் இருந்து கண்ட மக்கள் பதறினர்.

வனத்துறையை சேர்ந்த 30 பேர், அங்குள்ள பழங்குடி மக்கள் சிலரை அழைத்துக் கொண்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த போராட்டத்தில் தீயை அணைப்பதற்குள் பல ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இதுகுறித்து வனத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'கோடை காலத்தில் இது போன்று மலையில் தீ பிடிப்பது இயல்பு தான். ஆனால் இது அப்படி இயற்கையாக நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆடு, மாடு மேய்க்க சென்ற நபர்கள் மூலம் நிகழ்ந்திருக்கலாம் என தெரிகிறது' என்றார்.
சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால், 'இந்த தீ விபத்தினால் சுமார் ஐம்பது ஏக்கர் வனப்பகுதி வரை தீயால் எரிந்து நாசமாகியுள்ளன. மனிதர்கள் யாரும் மலை உச்சியில் இல்லாத காரணத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும், விலங்குகளின் நடமாட்டமும் அப்பகுதியில் அதிகம் இல்லை. சீமார் புல் போன்றவை மட்டும் தான் எரிந்து போயுள்ளன' என தெரிவித்துள்ளார்.
