மருத்துவமனையில் இருந்து தப்பித்த கொரோனா 'நோயாளி'... கூவம் ஆற்றில் சடலமாக கிடைத்த 'துயரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாவட்டங்களில் கொரோனா மிகவும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதனால் அங்கு கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி இன்று முதல் ஜூன் 30 வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது நோயாளி ஒருவர், மருத்துவமனையில் இருந்து சில தினங்களுக்கு முன் தப்பியோடியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து சென்னை நேப்பியர் பாலம் அருகேயுள்ள கூவம் ஆற்றில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய 65 வயதான கொரோனா நோயாளியின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
ஏற்கனவே சென்னை மக்களை கொரோனா அதிகம் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த தகவல் அவர்களை மேலும் அச்சப்பட வைத்துள்ளது.